சுங்கசாவடிகளில் சாலை பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும்


சுங்கசாவடிகளில் சாலை பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும்
x

சுங்கசாவடிகளில் சாலை பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என அகில இந்திய லாரி அசோசியேசன் தலைவர் சண்முகப்பா கூறினார்.

திருப்பத்தூர்

சுங்கசாவடிகளில் சாலை பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என அகில இந்திய லாரி அசோசியேசன் தலைவர் சண்முகப்பா கூறினார்.

அலுவலகம் திறப்பு

வாணியம்பாடியை அடுத்த கேதாண்டப்பட்டி கிராமத்தில் புத்துகோயில் லாரி உரிமையாளர் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் அனுமுத்து தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்வாணன், பொருளாளர் பாண்டியன் மற்றும் லாரி உரிமையாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய லாரி அசோசியேசன் தலைவர் சண்முகப்பா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நெக்குந்தி சுங்கசாவடி அருகே நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சாலை பராமரிப்பு தொகை மட்டும்

வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி சுங்கசாவடி பகுதியில் 2 கி.மீ சுற்றுப்புறத்தில் உள்ள லாரி உரிமையாளர்களின் லாரி சுங்கசாவடியை கடந்து சென்றால் கூட சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கசாவடி அருகே உள்ள லாரி உரிமையாளர்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் செய்து நெக்குந்தி சுங்கசாவடி அருகே கால வரையற்ற போராட்டம் நடைபெறும்.

கிருஷ்ணகிரி முதல் வாணியம்பாடி வரை 6 வழிச்சாலை அமைக்க ரூ.355 கோடி வரை செலவானது. இத்தொகையையும், சாலை பராமரிப்பு கட்டணமும் வசூலிக்க சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு இதுவரையில் ரூ.1,800 கோடி வசூலித்துள்ளனர். எனவே இனிமேல் சாலை பராமரிப்பு தொகையை மட்டும் சுங்க கட்டணமாக வசூலிக்க வேண்டும். இந்த நடைமுறை கேரளாவிலும், குஜராத்திலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் லாரிகளுக்கு...

இதனை மத்திய, மாநில அரசு கருத்தில் கொண்டு விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்ற சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் அகில இந்திய லாரி அசோசியேசன் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம். கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த காலங்களில் கரும்பு லோடு ஏற்றி வர உள்ளூர் லாரிகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு கரும்பு லோடு எடுத்து வர அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் லாரி உரிமையாளர்களே கரும்பு லோடு ஏற்றி வர அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நெக்குந்தி சுங்கசாவடிக்கு அகில இந்திய லாரி அசோசியேசன் நிர்வாகிகளுடன் சென்ற சண்முகப்பா, சுங்கசாவடி நிர்வாகி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தார். இதில் வேலூர், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, குடியாத்தம், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரி உரிமையாளர் சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story