தமிழ்நாட்டில் திராவிட மாடல் மட்டும்தான் ஆட்சி செய்ய முடியும்
தமிழ்நாட்டில் திராவிட மாடல் மட்டும்தான் ஆட்சி செய்ய முடியும் என்று சேலத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
பொதுக்கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் குரங்குச்சாவடியில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்த முறையும் ஆட்சி
திராவிட மாடல் காலாவதியான கோஷம் என்று கவர்னர் பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தை திராவிட மாடல் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும். அடுத்த முறையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார். இதில், எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை. விவசாயிகளின் நலனில் தி.மு.க. அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதாவது, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவித்து விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலத்தில் ஜவுளி பூங்கா வேண்டும் என்று 20 ஆண்டு காலமாக வைத்த கோரிக்கையானது, தற்போது ரூ.200 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. மேலும், ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டமும், ரூ.100 கோடியில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் திட்டமும், திருமணிமுத்தாறு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தி.மு.க.வின் கோட்டையாக..
சேலம் மாவட்டத்தை மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம். மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காலத்தில் எப்படி தி.மு.க. இயக்கம் இருந்ததோ? அதேபோல் வருங்காலத்தில் அதிகளவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
தயாநிதி மாறன் எம்.பி.,
முன்னதாக தயாநிதி மாறன் எம்.பி. பேசும்போது, திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்வதை செய்வது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்வது தான். அதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் அதை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்த ஆட்சியின் மீது ஏதாவது ஒரு புரளியை கிளப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், யாரை கை காட்டுகிறாரோ? அவர் தான் பிரதமராக அமரப்போகிறார், என்றார்.
இந்த கூட்டத்தில் மாநகர செயலாளர் ரகுபதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.