காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்


காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்
x

குளித்தலையில் உள்ள காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கரூர்

போக்குவரத்திற்கு சிரமம்

குளித்தலை நகராட்சி பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் முடியும் நிலையில் உள்ளதால், குளித்தலை பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் வழியில் குறுகளான மையப்பகுதியில் காந்தி சிலை இருப்பதால் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. இதனால் காந்தி சிலையை அருகில் உள்ள வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் குளித்தலை கோட்டாச்சியர் குறிப்பாணையில் இது தொடர்பாக நகர்மன்ற தீர்மானம் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம்

எனவே காந்தி சிலையை அகற்றி பஸ் நிலையத்தில் அல்லது சுங்க கேட் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைந்துள்ள இடத்திலோ அல்லது வேறு மாற்று இடத்திலோ மாற்றி அமைக்கவும் காந்தி சிலையை சுற்றியுள்ள சுற்றுசுவருக்கு வெளியே போக்குவரத்திற்கும் மற்றும் வாகன பார்வைக்கு மறைக்கும்படியாக நிறுவப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் இதர சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற நகர் மன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவது குறித்து கடந்த மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் காந்திசிலையை இடமாற்றம் செய்வது தொடர்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மகுடீஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. கட்சி நிர்வாகிகளை தவிர, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அ.ம.மு.க., தமிழ்மாநில காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் காந்தி சிலை குளித்தலை பகுதிக்கு ஒரு அடையாளம் என்றும் அந்த சிலையை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.


Next Story