ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவை ரத்து
தொடர் மழை காரணமாக தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஊட்டி,
தொடர் மழை காரணமாக தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
ரெயில் சேவை ரத்து
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் ஆங்காங்கே சாலையில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுகின்றன.
இந்தநிலையில் நேற்று ஊட்டி-குன்னூர் இடையே லவ்டேல் பகுதியில் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக நேற்று காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்படும் மலை ரெயில் (06141) சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் ஊட்டியில் இருந்து காலை 9.15 மணிக்கு குன்னூருக்கு செல்லும் மலை ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் திறப்பு
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், திடீரென ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் நேற்று காலை முதல் ஊட்டியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குந்தா அணையில் சகதி அதிகமாக இருப்பதால், அதிகளவு நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் குந்தா அணையில் இருந்து நேற்று 4-வது நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அவலாஞ்சி-30, அப்பர்பவானி-24, தேவாலா-47, பாடாந்தொரை-109, பந்தலூர்-160, சேரங்கோடு-52. அதிகபட்சமாக பந்தலூரில் 16 சென்டி மீட்டர் மழை பதிவானது.