ஊட்டி குதிரை பந்தயம் நிறைவு
ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.
அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.
குதிரை பந்தயம்
கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.
நிறைவு பெற்றது
இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர்.
பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.