ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை ஒவ்வொரு சமுதாய சங்கங்கள் சார்பில் சுவாமி வீதி உலா நடந்தது.
இதில் ஆதிபராசக்தி, துர்க்கை, காமாட்சியம்மன், கருமாரியம்மன், பவானி அம்மன், ராஜகாளி, ஹெத்தையம்மன், அங்காளம்மன் போன்ற அலங்காரங்களில் அம்மன் உலா வந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர் கலசம் பொருத்தப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தேரோட்டம்
இதையொட்டி காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 9 மணிக்கு விநாயகர், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1.55 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்.லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு கல் உப்புகளை தூவி வழிபட்டனர். தேருக்கு முன்பு சென்ற சிறு தேர்களில் விநாயகர், ஆதிபராசக்தி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளினர்.
போலீஸ் பாதுகாப்பு
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி ஊட்டியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
இன்று (புதன்கிழமை) வெள்ளைக் குதிரையில் நீலாம்பிகை பவனி வரும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) அம்மனின் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 21-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.