ஊட்டி சில்வர் ஸ்டார் அணி இறுதி போட்டிக்கு தகுதி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி சில்வர் ஸ்டார் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஊட்டியில் எச்.ஏ.டி.பி. மைதானத்தில் போட்டிகளை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், துணைத் தலைவர் உமாநாத், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டியில் ஊட்டியை சேர்ந்த 3 அணிகள் பங்கேற்றன. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் சில்வர் ஸ்டார் அணியும், இத்தலாரியன்ஸ் அணியும் மோதியது. தலா 10 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சில்வர் ஸ்டார் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் அபிஷேக் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனைத்தொடர்ந்து 60 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தலாரியன்ஸ் அணி 10 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் ஊட்டி சில்வர் ஸ்டார் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.