பாலக்கோட்டில் மீண்டும் திறக்கப்பட்ட அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி
பாலக்கோடு:
பாலக்கோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நிலையம் அருகே ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. ஆனால் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரி செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், டெக்னீசியன்கள் ஆகியோரை நியமிக்க கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, கர்ப்பக்கால ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விழாவில் பாலக்கோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் பாலசுப்ரமணியம், மருந்தாளுனர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.