சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்
சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
ஏரல்:
சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
அகழாய்வு பணிகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
சிவகளை பரும்பு பகுதியில் 3 கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு பொருட்கள், செம்பு நாணயம், நூல் நூற்க பயன்படும் தக்களி, உலோகங்களை சாணை பிடிக்கும் கல், பீங்கான் வளையல், தங்க ஆபரணம் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.
ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட நெல்மணிகளானது 3,200 ஆண்டுகள் தொன்மையானது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திறந்தவெளி அருங்காட்சியகம்
தொடர்ந்து சிவகளையில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான நில அளவீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''சிவகளை பரும்பு பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், முதற்கட்டமாக அங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட 2 இடங்களில் மொத்தம் ரூ.23 லட்சம் செலவில் இரும்பு தகடாலான மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன. அகழாய்வு குழிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை பொதுமக்கள் எளிதில் காணும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
மேலும் அங்கேயே பழங்கால பொருட்களை பாதுகாக்கும் வகையிலும் மற்றொரு கூடமும் அமைக்கப்படும். அடுத்த மாதத்துக்குள் (மார்ச்) இந்த பணிகள் நிறைவடையும்'' என்று தெரிவித்தனர்.