சேலம் மாவட்டத்தில் 2,398 பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு


சேலம் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 398 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 398 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு காலதாமதமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இறுதித்தேர்வு நடைபெற்றது. 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டன. தேர்வுகள் முடிவடைந்ததும் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 1,110 தொடக்கப்பள்ளிகள், 366 நடுநிலைப்பள்ளிகள், 136 உயர்நிலைப்பள்ளிகள், 159 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,771 அரசு பள்ளிகள், 123 அரசு உதவி பெறும் பள்ளிகள், 504 தனியார் பள்ளிகள் என மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2 ஆயிரத்து 398 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

பள்ளி திறந்த முதல் நாளான நேற்று சேலம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் கிருமி நாசனி தெளித்து, அதன்பிறகு அவர்களை உற்சாகமாக வரவேற்று பள்ளிக்குள் அனுப்பினர். பின்னர் பள்ளியில் மாணவிகள் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து தலைமை ஆசிரியை அனுராதா தலைமையில் இறைவணக்கம் நடத்தப்பட்டது.

பின்னர் மாணவிகள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதே போன்று சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளான நேற்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நீதி போதனை வகுப்புகள்

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இந்த ஆண்டு பள்ளி தொடங்கியதும் ஒரு வாரத்திற்கு பாடம் நடத்தாமல் மாணவ, மாணவிகளுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாலமோன் தலைமையில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து திரையில் நன்னெறி மற்றும் ஒழுக்க நெறி கதைகளை காண்பித்து அவற்றின் பொருள் குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.

பரிவட்டம், கிரீடம் அணிவித்து வரவேற்பு

இதே போன்று சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களுக்கு பரிவட்டமும், மாணவிகளுக்கு கிரீடமும் அணிவித்து வரவேற்றனர். மேலும் பலருக்கு வண்ண தொப்பி அணிவித்தும், ரோஜாப்பூ மற்றும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

இதே போன்று மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதிதாக வந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன. முன்னதாக பள்ளி திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் மாணவ, மாணவிகள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று விட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தனர்.


Next Story