ரூ.1¼ கோடியில் 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு


ரூ.1¼ கோடியில் 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.1¼ கோடியில் கட்டப்பட்ட 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருப்பத்தூர்

நலவாழ்வு மையம்

திருப்பத்தூர் நகராட்சி ராஜன் தெருவில் மக்கள் நலவாழ்வு துறையின் சார்பில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை க.தேவராஜி, திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி, மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

ஒருமருத்துவர்- செவிலியர்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் 5 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு பணியாளர் பணியாற்றுவார்கள் என கூறினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் பி.அசோகன் நன்றி கூறினார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் அருகிலும், புதூரில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி அருகிலும் தலா ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் சுபதி, நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலையில், வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் சுகாதார துறை அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து சுகாதார மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நகர மன்ற தலைவர் நட்டு வைத்தார்.


Next Story