தேனி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்களை வகைப்படுத்தும் வேதியியல் ஆய்வகம் திறப்பு


தேனி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்களை வகைப்படுத்தும் வேதியியல் ஆய்வகம் திறப்பு
x
தினத்தந்தி 20 April 2023 2:15 AM IST (Updated: 20 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்களை வகைப்படுத்தும் வேதியியல் ஆய்வகம் திறக்கப்பட்டது.

தேனி

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனித உடலில் ஏற்படும் கட்டிகள், சாதாரண கட்டிகளா? பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய் கட்டிகளா? என்பதை கண்டறிய திசு பகுப்பாய்வு ஆய்வகம், நோய்குறியியல் துறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கண்டறிந்த புற்றுநோய் எந்த வகையை சேர்ந்தது? என்பதை வகைப்படுத்த எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகத்தில் மட்டுமே கண்டறிய முடியும். இதனால் தேனி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட திசுக்கள், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள எதிர்ப்பு திசு வேதியியல் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே புற்றுநோய்களை வகைப்படுத்தும் எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகத்தை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, அரசு மருத்துவ கல்லூரி நோய்க்குறியியல் துறையில் அதிநவீன எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை மருத்துவ கல்வி இயக்குனரும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை முதல்வருமான மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்தார்.

இந்த நவீன ஆய்வகத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்படும் திசுக்களுக்கும், திசு பகுப்பாய்வு மற்றும் எதிர்ப்பு திசு வேதியியல் பரிசோதனையும் செய்து முடிவுகள் வழங்கப்படும். இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பயனடைவார்கள் என்று மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர், எழிலரசன், துணை கண்காணிப்பாளர் கண்ணன் போஜராஜ், நோய்குறியியல் துறை பேராசிரியர்கள் ரேவதி, சுபத்ரா, உதவி பேராசிரியர்கள் ஷோபனா, பீட்டர்சாமிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story