மழை பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு


மழை பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
x

பருவமழைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

வேலூர்

காட்பாடி

பருவமழைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

காட்பாடி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளால் தெருக்கள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி, கழிஞ்சூர், பவானி நகர், காந்திநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் மற்றும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு செய்தார்.

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டுப்பாட்டு அறைகள்

வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பு குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். வேலூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளால் தெருக்கள் மோசமாக உள்ளது.

சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காட்பாடி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் அகழி தண்ணீர் கோட்டை கோவிலுக்குள் வருவதை தடுக்க தற்போது ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, கவுன்சிலர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story