16 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
16 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2023-24-ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமணவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி, காடுவெட்டி, மேலவரப்பன்குறிச்சி, குலமாணிக்கம் மற்றும் செங்கராயன்கட்டளை ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இ-கேஓய்சி கொடுத்து புளூ டூத் பிரிண்டர் கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்த பிறகு விவசாயிகளின் விவரங்கள் தெரியவரும். இதன் அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.
கட்டணம் செலுத்த தேவையில்லை
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர், விவசாயிகள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை தூற்றி சாக்குகளில் பிடித்து லாரிகளில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதார விலை
கே.எம்.எஸ். 2023-24-ம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை விவரம் (1.9.2023 முதல்) நெல் கிரேடு 'ஏ' ரகத்திற்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,203, மாநில அரசின் ஊக்கத் தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.107, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை கூடுதல் (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,310 மற்றும் நெல் பொது ரகம், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,183, மாநில அரசின் ஊக்கத் தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.82, குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை கூடுதல் (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,265 என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.