575 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு


575 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x

டெல்டா மாவட்டங்களில் இதுவரை 575 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

டெல்டா மாவட்டங்களில் இதுவரை 575 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேமிப்பு கிடங்கில் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோவில்பத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைஅரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-விவசாயிகள் அறுவடை செய்யும் குறுவை மற்றும் சம்பா நெல்லை தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டு குறுவை பருவத்தில் 13,120 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டு 88 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 62,716 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு குறுவை நெல் 17,196 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டு இதுவரை 1,008 எக்டேர் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 74 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,188 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 64,977 எக்டோர் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 25,864 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் இதுவரை குறுவை சாகுபடிக்காக 575 இடங்களில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

ரூ.150 கோடி கடன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த ஆண்டு ரூ.150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இ்வ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது உணவு பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார், தனித்துணை கலெக்டர் ராஜன், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story