வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதி கோவில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் குடியானகுப்பம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில், வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாசா பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் உள்ள பழமை வாய்ந்த கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக கஜேந்திர வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 5.50 மணிக்கு நம்மாழ்வார் எழுந்தருளி மேற்கு திசை நோக்கி காட்சியளித்தார். தொடர்ந்து ரத்தின அங்கி உடைகளை சாற்றிக்கொண்டு கருட வாகனத்தில் எழுந்தருளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்க வாசல் நடைதிறக்கப்பட்டு அதன் வழியே நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார்.
தொடர்ந்து ராஜகோபுரத்தின் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவியுடன் வெளியே வந்த போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷத்துன் தரிசனம் செய்தனர். நீண்டவரிசையில் காத்திருந்து மூலவரை பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மனதுக்கினியன் பெருமாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு காட்சியளித்தார்
ஏராளமான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.