செவித்திறன் பரிசோதனை மையம் திறப்பு


செவித்திறன் பரிசோதனை மையம் திறப்பு
x

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.

கரூர்

செவித்திறன் பரிசோதனை மையம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று செவித்திறன் பரிசோதனை மையத்தை கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்தார். இந்த பரிசோதனை மையம் ரூ.31.50 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த முதல் நாளே செவித்திறன் பரிசோதனை செய்து, காது கேட்கும் திறன் குறைபாடுகளை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும் காதின் சவ்வு, நடுக்காது, உள்காது, காது நரம்பு முதலியவற்றை பரிசோதனை செய்திடவும் இயலும். மேலும் பிறவி காது கேட்கும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் பட்சத்தில் உயரிய சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆட்டிசம் மையம்

இதேபோல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிசம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 6 வயதிற்குள் செயல்திறன் பயிற்றுனர் மூலம் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சியினை அளிப்பதன் மூலம் மற்ற குழந்தைகளை போல் இவர்களின் செயல்பாடுகளை மாற்ற முடியும்.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடத்தைகளை சீராக்குவதற்கான பயிற்சிகள், சமூக வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 குழந்தைகள் ஆட்டிசம் மையத்தில் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வருகிறார்கள்.

நிதி ஒதுக்கீடு

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, மைலம்பட்டி, வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் உபகரண வசதிகளை மேம்படுத்திட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அறுவை அரங்க உபகரணங்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், குருதி வங்கிக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிட பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியும், உபகரண வசதியை மேம்படுத்திட ரூ.1 கோடியே 2 லட்சத்து 76 ஆயிரம் நிதியும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜா, மகப்பேறு தலைமை மருத்துவர் காயத்ரிதேவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story