பெரியகுளத்தில் இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு
பெரியகுளத்தில் இயற்கை உரம் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சியில் தினமும் 7 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை கொண்டு நகராட்சி நுண்ணுயிர் உரகுடில் மூலமும், மண்புழு உரம் தயாரிக்கும் குடில் மூலமும் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்திற்கான தரம் பகுப்பாய்வு செய்யப்பட்டு தர சான்றிதழ் மற்றும் அரசு வேளாண்மை துறை அலுவலகத்தில் உரிமம் பெற்று செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக நகராட்சி அலுவலகத்தில் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமை தாங்கி, உரம் விற்பனை மையத்தை திறந்து வைத்தார். அப்போது உரம் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இதில், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், ஆணையாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை கல்லூரி மற்றும் வேளாண்மை துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், நகராட்சி பணியாளர்கள், அரசு வக்கீல் சிவக்குமார், பெரியகுளம் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விற்பனை மையத்தில் ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ அளவில் பேக்கிங் செய்தும், பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப உரம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ உரம் ரூ.10 வீதம் விற்பனை செய்யப்படுகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் அசன்முகமது மற்றும் சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர்.