கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறப்பு


தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இதையொட்டி பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இதையொட்டி பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது.

பேச்சிப்பாறை அணை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவ நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதில் கன்னிப்பூ பயிர் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் இறுதியில் மூடப்படும்.

அதன்படி நடப்பாண்டு கன்னிப்பூ சாகுபடிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நேற்று காலையில் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் பேச்சிப்பாறை அணையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார்.

பேச்சியம்மன் கோவிலில் பூஜை

இந்த நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோவிலில் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் அணையின் மதகு பகுதியிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அணையில் புனித நீர் தெளிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டன. அணை திறக்கப்பட்டதும் கால்வாயில் வெளியேறிய தண்ணீரில் பூக்கள் மற்றும் நெல் மணிகள் தூவப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஆல்பிரட் ராபின்சன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சந்திரபோஸ், பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு உதவி செயற்பொறியாளர் மெல்கி சதேக், உதவி பொறியாளர் லூயிஸ் அருள் செழியன், அரசு வக்கீல் ஜான்சன், வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் ஹென்றி, பாசன சபை நிர்வாகிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புனரமைப்பு பணிகள் நடைபெற...

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சிற்றாறு பட்டணம் கால்வாயில் நீண்ட நெடுங்காலமாக முழுமையான புனரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. இதற்கு பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி ஒரு விரிவான திட்டம் தயாரிக்க வேண்டுமென்று கேட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். பேச்சிப்பாறை அணையை தூர்வாரும் பணிகளுக்கு பல்வேறு கட்ட அனுமதி பெறவேண்டியுள்ளது" என்றார்.


Next Story