பட்டா வழங்க கோரி சிவகாசியில் கஞ்சி தொட்டி திறப்பு
சிவகாசியில் பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றாமல் பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து கஞ்சி தொட்டி திறந்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசியில் பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றாமல் பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து கஞ்சி தொட்டி திறந்துள்ளனர்.
பொத்துமரத்து ஊருணி
சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தனர். இதில் 82 கட்டிடங்கள் இருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 9 கடைகளை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வந்த 43 பேருக்கு மட்டும் எம்.புதுப்பட்டி அருகில் நிலம் வழங்கி சிவகாசி தாசில்தார் நடவடிக்கை எடுத்தார். இதில் 9 பேர் அதற்கான ஆணைகளை பெற்று சென்றனர். மற்றவர்கள் உரிய ஆணைகளை பெற வில்லை.
கஞ்சி தொட்டி திறப்பு
இந்த நிலையில் 14-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தாங்கள் குடியிருந்து வரும் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என்று கோரி நேற்று மதியம் கஞ்சி தொட்டி திறந்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொத்துமரத்து ஊருணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருகிற 14-ந்தேதி அகற்ற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சிதொட்டி திறப்பு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.