கோடைவிடுமுறைக்கு பின் தொடக்கப்பள்ளிகள் திறப்பு-அரசுப்பள்ளிகளில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதையடுத்து முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதையடுத்து முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிகள் திறப்பு
மதுரை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மழலையர், தொடக்கப்பள்ளிகள் 1,304 உள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
இதற்கிடையே தொடக்க பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குழந்தைகளுடன் தகவல் பரிமாறிக்கொண்டார்.
அத்துடன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளானகுடிநீர், கழிப்பறை வசதி முறையாக உள்ளதாக ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை
இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, மதுரை கல்வி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 629 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த மாதம் 31-ந் தேதி வரை 7,490 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அரசுப்பள்ளிகளில் 4,140 மாணவ, மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 3,350 மாணவ, மாணவிகளும் சேர்க்கை பெற்றுள்ளனர். 1-ம் வகுப்பில் மட்டும் இந்த கல்வியாண்டில் சுமார் 5800 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
திருமங்கலம் கல்வி மாவட்டம்
அதேபோல, திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 625 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 944 மாணவ, மாணவிகளும், எல்.கே.ஜி. வகுப்பில் ஒரேயொரு மாணவரும், யூ.கே.ஜி. வகுப்பில் 27 மாணவ, மாணவிகளும் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2,227 மாணவ, மாணவிகளும், எல்.கே.ஜி. வகுப்பில் 142 மாணவ, மாணவிகளும், யூ.கே.ஜி. வகுப்பில் 43 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 76 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
அதன்படி, இந்த வருடம் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 3460 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.