1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறப்பு


1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறப்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் 12-ந் தேதியும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அழைத்து வந்து பள்ளிகளில் விட்டனர்.

அழுது புரண்ட மாணவர்கள்

நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசரிய- ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். புதிதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ- மாணவிகள் பலர் சந்தோஷமாக பெற்றோரிடம் டாடா காட்டிவிட்டு வகுப்பறைகளுக்குள் சென்றனர்.

பல மாணவ- மாணவிகள் பெற்றோரை பிரிய மனமில்லாமல் அழுது புரண்டதையும் காண முடிந்தது, அவ்வாறு கதறி அழுத மாணவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் சமாதானப்படுத்தி வகுப்பறைகளுக்குள் அழைத்துச் சென்றனர். இதனால் பல பள்ளிகள் நேற்று காலை மிகுந்த பரபரப்புடன் காட்சி அளித்தது.

நோட்டு புத்தகங்கள் வினியோகம்

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தொடங்கிய முதல்நாளிலேயே நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டு இருந்தன. சில மெட்ரிக் பள்ளிகள் முதல் நாளான நேற்று அரைநாள் மட்டுமே செயல்பட்டன. மற்ற பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வரையும், மற்ற மாணவர்களுக்கு மாலை வரையும் வகுப்புகள் நடந்தது.

இன்று (வியாழக்கிழமை) முதல் பள்ளிகள் வழக்கம்போல் முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 12-ந்தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலை நேரத்தில் மாணவ-மாணவிகள் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றதால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்ாதது. நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story