1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதில் 2¾ லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 2022-2023-ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் காலையில் மிகவும் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பெற்றோர் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர்.

மேலும் சில மாணவ-மாணவிகள் பள்ளி வேன்கள், ஆட்டோவில் வந்தனர். சீருடையில் புத்தக பையை சுமந்து கொண்டு பள்ளிக்கு மகிழ்ச்சியாக வந்தனர். மாணவ-மாணவிகளை ஆசிரியர், ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். புத்துணர்ச்சியோடு வந்த மாணவ-மாணவிகள் பள்ளி வகுப்பறையில் சக மாணவ-மாணவிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு சென்ற உற்சாகத்தில் இருந்தனர்.

பாடப்புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனை பெற்ற மாணவ-மாணவிகள் வகுப்பறையில் ஆர்வமுடன் படித்தனர். பள்ளி திறந்த முதல் நாள் என்பதால் நேற்று மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பாடங்கள் பற்றி ஆசிரியர்கள் முன்னுரை கொடுத்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 கல்வியாண்டிற்கு பிறகு இந்த கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,967 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் வந்தனர். அரசு பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 20-ந் தேதியும், பிளஸ்-1 வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கலெக்டர் ஆய்வு

பள்ளிகள் திறப்பையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் பாடப்புத்தகங்களை வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். பள்ளிகள் திறந்ததையொட்டி பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கந்தர்வகோட்டை, கறம்பக்குடி

கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரை விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சிமன்ற தலைவர் அருணாசலம் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சந்தனம், குங்குமம், ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் வழங்கி இன்முகத்தோடு வரவேற்றனர்.

கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர். வெட்டன்விடுதி, கறம்பக்குடி அக்ரஹாரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்பே வந்து பள்ளி நுழைவுவாயிலில் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

மரக்கன்று வழங்கி வரவேற்பு

கீரமங்கலம் அருகே சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பூமொழி மற்றும் மரம் தங்ககண்ணன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றனர்.


Next Story