தமிழகம் முழுவதும் 6 - 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்


தினத்தந்தி 12 Jun 2023 8:46 AM IST (Updated: 12 Jun 2023 10:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் 6 - 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை,

2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் கடந்த மாதம் (மே) இறுதியில் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. அதன்படி, ஜூன் 7-ந் தேதி 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது.

ஆனால் கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்களை வாட்டி வதைத்தது.

இதனை கருத்தில் கொண்டு, கடந்த 7-ந் தேதி திறக்கப்படுவதாக இருந்த பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (இன்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை மறுதினம்) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கல்வித்துறையின் அறிவிப்பின்படி, 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ரோஜாப்பூக்களை கொடுத்தும் மலர்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டையில் ரோஜாப்பூ கொடுத்து, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்கார வளைவுகள், தோரணங்கள் அமைத்து ரோஜா பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி மாணவிகளை பள்ளி ஆசிரியைகள் வரவேற்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து மாணவிகள் கூறியதாவது:- லீவுல ரொம்ப போர் அடிச்சது, இப்பதான் சந்தோஷமா இருக்கு பிடிச்ச ஆசிரியர் இருக்கங்கா, நண்பர்கள் இருக்காங்க என்றார்.


Next Story