துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு
சிறுவந்தாடு ஊராட்சியில் துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் லட்சுமணன் எம்.எல்.ஏ. பங்கேற்றாா்.
விழுப்புரம்:
கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாடு ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.94 லட்சம் மதிப்பில், புதிதாக துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குடன் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி சிறுவந்தாட்டில் உள்ள துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த விழாவில் டாக்டர் இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, விவசாயிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா, வேளாண் துணை இயக்குனர் சத்தியமூர்த்தி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட துணை பொறியாளர் சரவணபவன், விவசாய பிரதிநிதிகள் முத்துமல்லா, குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.