ரூ.12.95 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு
ஊட்டி அருகே மலர்பெட்டு பகுதியில் ரூ.12.95 கோடியில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி அருகே மலர்பெட்டு பகுதியில் ரூ.12.95 கோடியில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
துணை மின் நிலையம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கடநாடு கிராமத்தில் மலர்பெட்டு பகுதியில் ரூ.12.95 கோடி செலவில் நிறுவப்பட்ட 110-11 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் உள்பட பல்வேறு துணை மின் நிலையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் மலர்பெட்டு பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கூடலூர் பகுதியில் தொடங்கப்பட்டதன் மூலம் குழந்தைகளின் வருகை அதிகரித்து உள்ளது.
தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் சுற்றுலா மற்றும் தேயிலை விவசாயம் ஆகும். எனவே, சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா தலங்கள் ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் 349 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்
மலர்பெட்டு துணை மின் நிலையத்தின் மூலம் எப்பநாடு, உல்லத்தி, தூனேரி, புதுமந்து, தாவணெ, கடநாடு, சின்னக்குன்னூர், பெந்தட்டி, அணிக்கொரை, தொரையட்டி, தேனாடுகம்பை, கொதுமுடி, தும்மனட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஊட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ், செயற்பொறியாளர் ஊட்டி (பொது) ரமேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சந்தீப், ஆர்.டி.ஓ. துரைசாமி, கடநாடு ஊராட்சித்தலைவர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.