உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்

சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்க வாசல்திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 5.50 மணிக்கு நம்மாழ்வார் எழுந்தருளி மேற்கு திசை நோக்கி காட்சியளித்தார். முன்னதாக அத்யயன் உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் வடக்கு பரமபத வாசல் வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து ரத்தின அங்கி உடைகளை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய உத்திர அரங்கநாதர் வடக்கு திசையில் இருந்துவந்து கிழக்கு திசை நோக்கி நின்று, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ராஜகோபுரத்தின் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த போது அங்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வாண வேடிக்கையும் நடைபெற்றது.

தேரில் எழுந்தருளினார்

காலை 7 மணிக்கு உற்சவர் உத்திர அரங்கநாதர் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். தெருநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். உத்திர ரங்கநாதருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான முத்தங்கி சேவை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாள் முழுவதும் பஜனை பாடல்கள் பாடிக்கொண்டு ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

சென்னை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 20 குழுக்களாக பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடத்தினர்.

வேலூர் மாவட்ட நீதிபதி வசந்த லீலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பேரூராட்சி தலைவர் சுப பிரியா, அணைக்கட்டு தாசில்தார்கள் ரமேஷ், மீரா பெண் காந்தி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, தக்கார் சுரேஷ்குமார், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல்அலுவலர் உமாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

போலீஸ் பாதுகப்பு

பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி, கணக்காளர் பாபு, கோவில் மணியம் ஹரிகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story