வேலூர் மாவட்டத்தில் 18 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
வேலூர் மாவட்டத்தில் 18 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகர்ப்புற நலவாழ்வு மையம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வேலூர் மாவட்டத்தில் 18 நகர்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
அதன்படி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி பகுதி-2 மற்றும் பகுதி-4, அம்பேத்கர்நகர், அருங்கநத்தம்பூண்டி, பலவன்சாத்துகுப்பம், சின்னஅல்லாபுரம், சாய்நாதபுரம், வி.ஜி.ராவ்நகர், சலவன்பேட்டை, ஓல்டுடவுன், காகிதப்பட்டறை, பையர்லைன், அரியூர், சேண்பாக்கம் ஆகிய 15 இடங்களிலும், குடியாத்தம் நகராட்சி ராஜாநகர், தரணம்பேட்டை மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி தாரைக்காடு ஆகிய 3 இடங்கள் என்று மொத்தம் 18 இடங்களில் புதிதாக நகர்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
காட்பாடி
காட்பாடி பவானி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்து விளக்கேற்றி நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர்புற நலவாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், நர்சு, சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர் என்று 4 பேர் பணியில் இருப்பார்கள். இந்த மையம் காலை 8 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் இயங்கும். இவை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சி 12-வது வார்டில் ராஜா நகர் மற்றும் 8-வது வார்டில் எம்.பி.எஸ்.நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டது. குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல்குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் கவிதாபாபு, மருத்துவர்கள் ஆர்.சதீஷ்குமார், ஜே.பிரியதர்ஷினி, உ.ரூத்கனிமொழி, ஆர்.ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நகர்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு நகராட்சி தரைக்காடு வி.கோட்டா ரோடு பகுதியில் நகர்ப்புற மக்கள் நலவாழ்வு மையத்தை நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான ஆலியார் ஜூபேர் அஹம்மத், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஹர்ஷத், நகராட்சி கவுன்சிலர்கள் அதிகுர் ரஹ்மான், அப்துல் ஜமீல், சின்னலாசர், அகமத் பாஷா, மாவட்ட பிரதிநிதி பிரபாத் குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தவுபிக் அஹம்மத், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் உத்ரகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் தேசிய சிறார் திட்ட மருத்துவ அதிகாரி சிவகுமார் நன்றி கூறினார்.