உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதை திறப்பு
ராமேசுவரம் கோவிலில் 6 மாதங்களுக்்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்லும் பாதை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் 6 மாதங்களுக்்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்லும் பாதை திறக்கப்பட்டது.
ராமநாதசாமி கோவில்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு கட்டண தரிசன பாதை வழியாகவும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள பாதை வழியாகவே தரிசனம் செய்யவும் பல ஆண்டுகளாகவே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதனிடையே ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தால் கடந்த சில மாதங்களாகவே பிரகாரங்களில் பல இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டதுடன் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதையும் மூடப்பட்டு அந்த பாதை வழியாக தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே உள்ளூர் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்.
தடுப்புகள் அகற்றம்
இந்த நிலையில் உள்ளூர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நகர சபை சேர்மன் நாசர் கான், வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் ஆகியோர் எடுத்த முயற்சின் அடிப்படையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதை திறக்கப்பட்டு உள்ளூர் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று கோவிலில் விசுவநாதர் சன்னதி அருகே உள்ள சாமி சன்னதி செல்லும் பாதை திறக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று சாமியை தரிசனம் செய்து அம்பாளையும் தரிசனம் செய்து வந்தனர். மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பகுதி இடையூறு இல்லாமல் உள்ளதா என்பதை நகர சபை சேர்மன் நாசர்கான் நேற்று பார்வையிட்டார். அதுபோல் சாமி சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தையும் சுற்றி வருவதற்கு இடையூறாக இருந்த தடுப்பு கம்பிகளும் அகற்றப்பட்டுள்ளன.
போலீசார் பாதுகாப்பு
விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் தலைமையில் நேற்று கோவிலின் சாமிசன்னதி பிரகாரம், 2-ம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம் மற்றும் கோவில் வாசல் நுழைவு பகுதி என அனைத்து இடங்களிலுமே வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.