கர்நாடக அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
பள்ளிகளை தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைெபசிஎ
ஆசனூர் அருகே கர்நாடக அரசு பஸ்சின் கண்ணாடியை காட்டு யானை உடைத்தது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினார்கள்.
பஸ்சை மறித்த யானை
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கோவைக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே பஸ் சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை திடீரென ரோட்டுக்கு வந்து நின்றது. இதனால் அச்சம் அடைந்த டிரைவர் சற்று தூரத்திலேயே பஸ்சை நிறுத்தினார். அப்போது ஆவேசத்துடன் யானை பஸ்சை நோக்கி ஓடிவந்தது.
கண்ணாடியை உடைத்தது
அதன்பின்னர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை துதிக்கையால் அடித்து உடைத்தது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். ஆனால் அதன் பிறகு பயணிகளுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் ரோட்டிலேயே அங்கும், இங்கும் அந்த யானை நடமாடியது.
அந்த காட்சியை பயணிகள் பலர் செல்போனில் படம் பிடித்தனர். சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு யானை தானாக காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே பயணிகளும், அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களும் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது. கர்நாடக அரசு பஸ்சின் கண்ணாடியை காட்டு யானை உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.