ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க தடை


ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க தடை
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து ெகாண்டு இருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை நீக்கியது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலை நீர்வரத்து குறைந்தும், மாலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தும் காணப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட கலெக்டர் சாந்தி மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story