உரிமம் பெறாமல் செயல்பட்டபால் விற்பனை கடை மூடல்; 356 லிட்டர் பால், தயிர் பறிமுதல்


தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உரிமம் பெறாமல் செயல்பட்ட பால் விற்பனை கடை மூடப்பட்டது. கடையில் இருந்த 356 லிட்டர் பால், தயிர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் வங்கி காலனியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பால் விற்பனை கடைக்கு அருகே தனியார் நிறுவன பால் வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் அந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்போது தனியார் நிறுவனம் மூலம் அந்த கடைக்கு பால் சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அந்த கடை மற்றும் வாகனத்துக்கு உரிமையாளர் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கடை மற்றும் வாகனத்தில் இருந்த 356 லிட்டர் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடையின் இயக்கத்தை நிறுத்தி வைத்தும் உத்திரவிட்டனர்.

மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்கும், உரிம நிபந்தனைகளுக்கும் புறம்பாக உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத கடைக்கு பால் சப்ளை செய்த தனியார் பால் நிறுவனத்திடம் விசாரணை செய்து, அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story