நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்மின்சாரம் தாக்கி ஆபரேட்டர் சாவுதிண்டிவனம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்மின்சாரம் தாக்கி ஆபரேட்டர் சாவுதிண்டிவனம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஆபரேட்டர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் காளிதாஸ் (வயது 41). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தை இயக்கும் ஆபரேட்டர் வேலையை தினக்கூலி அடிப்படையில் பார்த்து வந்தார். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு பூவரசி(15), ஜமுனா(11) என்கிற 2 மகள்களும், ஆகாஷ்(13) என்கிற மகனும் உள்ளனர்.

நேற்று காலை வழக்கம்போல் காளிதாஸ் வேலைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த எந்திரத்தை அவர் சுத்தம் செய்துள்ளார். தற்சமயம் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, எந்திரம் சற்று ஈரம் நிறைந்து இருந்துள்ளது. இதில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு, காளிதாஸ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மயங்கிய நிலையில் கிடந்தார்.

மருத்துவமனையை முற்றுகை

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே காளிதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காளிதாசின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். அப்போது தான், உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்து, பெற்று செல்வோம் என்று கூறினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த திண்டிவனம் தாசில்தார் அலெக்ஸ்சாண்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிவாரணம் வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அவர்கள் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதன் பின்னர் மாலையில் பிரேத பரிசோதனை நடந்து, உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story