கண் மருத்துவ முகாம்
இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி யூனியனுக்குட்பட்ட புதுக்குடி கிராமத்தில், வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. இதில் தூய்மைப் பணிகள், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட அணிகளுடன் இணைந்து புதுக்குடி சமுதாய நலக்கூடத்தில் வைத்து, அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் விஜயபாரத், வெங்கடேஷ், சகாயராஜ் மற்றும் செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் விழி ஒளி பரிசோதனைகளை தாசன் செய்தார். டிக்சன் கண்தான விழிப்புணர்வு பற்றி பேசினார். முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் கண்நோய் மற்றும் உணவு பழக்கங்கள் பற்றி கூறினார். இதில் தன்னார்வலர் குமரேசன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.