கோவிலுக்கு காம்பவுண்டு சுவர் அமைக்க எதிர்ப்பு
விளாத்திகுளம் அருகே கோவிலுக்கு காம்பவுண்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வேம்பார் தென்மயிலை நகரில் கோவில் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் அருகருகே அமைந்துள்ளன. இந்த நிலையில் கோவிலைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு கிறிஸ்தவ ஆலய தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கோவில் நிலத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்கலாம் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து நேற்று கோவிலைச் சுற்றிலும் நில அளவீடு செய்வதற்கு வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது நில அளவீடு செய்வதற்கு கிறிஸ்தவ ஆலய தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.