நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுடன் போராட்டம்
பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் நிழற்கூடம்
பேரணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அமலு விஜயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து நிழற்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.
இதற்கு கீழ்பாலூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜீவிதா செந்தில் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று துணைத் தலைவர் ஜீவிதா செந்தில் மற்றும் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் நிற்க வைத்தனர்.
போராட்டம்
மேலும் இங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டினால் பள்ளி மாணவிகள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள் என்றும், நிழற்கூடத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளி மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.