ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துகடையடைப்பு போராட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துகடையடைப்பு போராட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு

ஈரோடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புஞ்சைபுளியம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சத்தியமங்கலம் மெயின்ரோடு, பவானிசாகர் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 136 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 50 கடைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து தடுப்புகள் அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. எனவே கடைகளுக்கு முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

நோட்டீஸ்

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தினசரி மார்க்கெட் ரோடு, பஸ் நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான 136 கடை வாடகைதாரர்கள் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள 50 கடை வாடகைதாரர்களுக்கு நகராட்சி சார்பில் கடந்த 7-ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த நோட்டீசில், '7 நாட்களுக்குள் தங்கள் கடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

கடையடைப்பு போராட்டம்

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகைதாரர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்தியமங்கலம் மெயின் ரோடு, பவானிசாகர் ரோடு, பஸ் நிலையம், மற்றும் தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள 150 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைக்காரர்கள் மட்டும் வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி சார்பில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். கடையடைப்பு போராட்டத்தால் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story