கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிரே சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிரே சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிரே கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை செல்கிறது. இந்த சாலை இருவழி சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது சித்தூர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பிரதான சாலையான இந்த வழியாக செம்மண்டலம், கோண்டூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் என பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ, லாரி என ஏராளமான வாகனங்களும் சென்று வருகிறது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும். இது தவிர அரசு தலைமை ஆஸ்பத்திரியும் உள்ளதால், நோயாளிகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதன் அருகே ஆட்டோ நிறுத்தம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துமிடம் என எப்போதும் இந்த சாலை பிஷியாக இருக்கும்.
சாலை உள்வாங்கியது
இந்நிலையில் இந்த சாலையில் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் வரும் வழியில் அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி வாகனங்கள் செல்ல, செல்ல உடைந்து காணப்பட்டது. நேற்று திடீரென பாதாள சாக்கடை மூடி உடைந்து, அதன் அருகில் சாலை உள்வாங்கியது. அப்போது இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, பஸ் என எந்த வாகனங்களும் வரவில்லை.
அதில் 12 அடி ஆழ பள்ளம் உள்ளது. வாகன ஓட்டிகள் யாராவது விழுந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த ஒரு வழிபாதை தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டது. அதாவது, நெல்லிக்குப்பம் -கடலூர் சாலை குறிப்பிட்ட தூரம் அடைக்கப்பட்டது.
பரபரப்பு
இருப்பினும் கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பின்னர் இது பற்றி கடலூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில் ஊழியர்கள் விரைந்து சென்று, அந்த பாதாள சாக்கடையால் ஏற்பட்ட பள்ளத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.