எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்
எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், தங்கம், மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் குபேரன், ஸ்ரீதேவி, மாவட்ட பொருளாளர் சுகுமார், நகர தலைவர் விஜயன், நகர பொதுச்செயலாளர் குமரகுருபரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தாஸசத்தியன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் திருப்பதி நாராயணன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என தி.மு.க. உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த 1975-ம் ஆண்டு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி திறந்து வைத்தார். பகுருத்தீன் அலி, ஜனாதிபதியாக இருந்தார். 1977-ம் ஆண்டில் நாடாளுமன்ற நூலகத்தை அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தார். அப்போதெல்லாம் ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டதாக யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், பிரதமர் மோடி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் செய்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே, தமிழக முதல்-அமைச்சர் துபாய் சென்று வந்தபிறகு எந்தவித வெளிநாட்டு முதலீடும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.