பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் மறியல்


பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் மறியல்
x

பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அளவீடு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி எதிர்காலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக மாறும்போது, அதற்கு இடம் தேவைப்படும். எனவே அரசு பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக்கூடாது என்றும், அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கு சொந்தமான இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடி ஸ்ரீபுரந்தான்-அரியலூர் சாலையில் கோவிந்தபுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story