பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மக்களை வாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி நெல்லை தொகுதி இணைச்செயலாளர் மாரிசங்கர் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், நெல்லை மாநகராட்சி வணிக மையத்தில் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி பேனா நினைவு சின்னம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கங்கைகொண்டான் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், "கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் பொதுவெளியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். கங்கைகொண்டான் ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
கிராம மக்கள் நலன் காக்கும் பாதுகாப்பு இயக்கத்தினர் செயலாளர் சிவன் தலைமையில் கொடுத்த மனுவில், "ராதாபுரம், வள்ளியூர் யூனியன் பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை. நாங்கள் ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் அடிக்கடி மின்இணைப்புகளை துண்டித்து விடுவதால் சிரமப்படுகிறோம். எனவே தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி நெல்லை மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செல்வின் கொடுத்த மனுவில், "களக்காடு-சேரன்மாதேவி சாலையில் இடையங்குளம் ஊராட்சி எல்லையில் மடத்து ஊரணியில் இருந்து மங்கம்மாள் சாலை தொடங்கி பொட்டல் வழியாக கரம்பையில் உள்ள பிரதான சாலையில் இணைகிறது. இந்த சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் வெந்நீர் வழங்கவும், தண்ணீர் சுத்தம் செய்யும் உபகரணங்கள் பழுதின்றி செயல்படவும், ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்மூலம் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் ஜாகிர் உசேன், செல்வகுமார் ஆகியோர் மனு கொடுத்தனர்.
வள்ளியூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, தங்கள் குடியிருப்புக்கு மேல் செல்லக்கூடிய உயர் மின்னழுத்த கம்பியை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
சேரன்மாதேவி அருகே உள்ள மணிமுத்தார்குளத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்களை பனையேறும் தொழில் செய்யவிடாமல் போலீசார் இடையூறு செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த விவசாயிகள், பெரியகுளத்தை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மனு கொடுத்தனர்.