என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1-வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மந்தாரக்குப்பம் அருகே கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 3-வது வார்டுகளில் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கங்கைகொண்டான் பேரூராட்சி 2-வது வார்டுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென வருகை புரிந்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் வந்திருந்தனர்.
தடுத்து நிறுத்தி முற்றுகை
அதிகாரிகள், அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தும் வகையில் அளவீடு செய்ய சென்றதாக தெரிகிறது. இதையறிந்த அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் ஒன்று திரண்டு, அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டரிடம், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். நிலம் கொடுத்த எங்கள் பகுதி மக்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்காமல், வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கி வருகிறார்கள், நிலம் கொடுத்த எங்களுக்கு வேலை வாய்ப்பை மறுப்பதற்கான காரணம் என்ன? என்று பொதுமக்கள் கேள்விகளை எழுப்பிவாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
வாக்குவாதம்
அப்போது, போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில், அங்கிருந்த போலீஸ்காரர்கள் கலெக்டரிடம் ஆவேசமாக கேள்விகளை கேட்டவர்களை செல்போனில் படம் பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் மேலும் முற்றியது. இதனால் ஊர்மக்கள் அதிகளவில் அங்கு திரண்டனர்.
கலெக்டர் வெளியேறினார்
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். அப்போது, அந்த பகுதி மக்கள், எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வாய்ப்பும் கொடுத்தால் மட்டுமே எங்கள் நிலத்தை கையகப்படுத்த முடியும். இல்லையெனில் எங்கள் அனைவரையும் கொன்றுவிட்டு இடத்தை எடுத்து செல்லும் நிலைதான் ஏற்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.