மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு


மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு:  விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
x

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம்

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே லோயர்கேம்ப் வண்ணான் துறை என்னுமிடத்தில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் 18-ந்தேதி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து லோயர்கேம்ப் வண்ணான் துறையில் பூமி பூஜை செய்தனர். அங்கு தற்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தி்ட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தை வைகை அணையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.

தொடர் ஓட்டம்

இதனை வலியுறுத்தி கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தேனி மாவட்ட பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், மற்றும் உத்தமபாளையம் ரெட் தொண்டு நிறுவன தலைவர் மும்தாஜ் ஆகியோர் நேற்று காலை குருவனூத்து பாலத்தில் இருந்து வைகை அணை வரை தொடர் ஓட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதற்காக விவசாயிகள் அங்கு ஒன்று கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்று விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

போலீசார் குவிப்பு

இதையடுத்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடந்து செல்ல அனுமதி வேண்டும் என விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அனுமதி வழங்காததால் சிறிது நேரத்திற்கு பிறகு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் விரைவில் அனுமதி பெற்று மீண்டும் குருவனூத்து பாலத்தில் இருந்து வைகை அணை வரை தொடர் ஓட்டம் செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story