தேரோடும் வீதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
மயிலாடுதுறையில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
மயிலாடுதுறையில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
பா.ம.க.வினர் மனு
பா.ம.க. வினர், நகர செயலாளர் கமல்ராஜா தலைமையில் தங்கள் கட்சி கொடிகளுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
டாஸ்மாக் கடை
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள தெருவிற்கு நேர் எதிரில், நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு எதிரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில்தான் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பதிவு செய்யப்படுகிறது. அதற்கு அருகில் கால்நடை மருத்துவமனையும் உள்ளது. மேலும் சின்னக்கடை வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது.
தேரோடும் வீதி
சின்னக்கடை வீதி நெடுஞ்சாலையாக இருந்தாலும் அது மயூரநாதர் கோவிலின் வடக்கு வீதி ஆகும். ஆண்டுதோறும் கடைமுக தீர்த்தவாரியின்போது தேரோட்டம் இந்த சாலையில்தான் நடைபெறும். எனவே தேரோடும் இந்த வீதியில் மதுக்கடையை அமைக்கக்கூடாது.
பொதுமக்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த சின்னக்கடை வீதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
உரிய நடவடிக்கை
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து மனு அளித்த பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.