சமையல் கியாஸ் குடோன் அமைக்க எதிர்ப்பு: வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை


சமையல் கியாஸ் குடோன் அமைக்க எதிர்ப்பு: வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
x

சமையல் கியாஸ் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபாளையம் கிராமத்தில் புதிதாக தனியாருக்கு சொந்தமான சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக அப்பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க இயலாத சூழல் உள்ளது.

இதனையடுத்து, கடந்த 1-ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக தாசில்தார் கண்ணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் அமைப்பதற்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவனிடம் மனு ஒன்றை அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story