அழகுசமுத்திரம் ஊராட்சியில்குறுகலான சாலை அமைக்க எதிர்ப்புதி.மு.க.-பா.ம.க.வினர் இடையே வாக்குவாதம்
அழகுசமுத்திரம் ஊராட்சியில் குறுகலான சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாரமங்கலம்,
தாரமங்கலம் ஒன்றியம் அழகுசமுத்திரம் ஊராட்சி கோட்டர்ஸ் பகுதியில் கான்கிரீட் சாலையை புதிய பேவர் பிளாக் சாலையாக மாற்ற ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த சாலை பணி நடந்து வருகிறது. இந்த சாலை குறுகலாக உள்ளதாகவும், இதனால் அதனை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும் என்று கூறி பா.ம.க. கவுன்சிலர் சின்னதம்பி மற்றும் கட்சியினர், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். மேலும் சாலை பணியை நிறுத்துமாறு கூறி, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த அழகுசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவி அறிவழகி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வினர் அரசு ஒதுக்கீட்டின் படி வேலை நடைபெறுவதாக கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி, ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒன்றிய கவுன்சிலர்கள் நிதி மூலம் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.