நீர்ப்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி கட்டிடம் பழுது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரியமங்கலம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே கட்டிடம் இருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் பள்ளி கட்டிடம் கட்ட நீர்ப்பிடிப்பு பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், நீர்ப்பிடிப்பு அல்லாத இடத்தில் பள்ளி கட்டிட பணியை தொடங்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிட பணிகள் தொடங்குவது குறித்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஒரு தரப்பினரும், பள்ளி கட்டிடம் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் ஆய்வுக்கு பின் கட்டிட பணிகள் குறித்து அறிவிக்கப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து செங்கம் வட்டாட்சியர் முனுசாமி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது இருதரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.
ஆய்வினை தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து வட்டாட்சியர் முனுசாமி சத்துணவு சாப்பிட்டார்.