ஜலகண்டாபுரம் அருகே அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு போலீஸ் நிலையத்தில், பொதுமக்கள் மனு
ஜலகண்டாபுரம் அருகே அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மேச்சேரி,
அரசு மதுக்கடை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பஸ் நிலையம் அருகே 2 அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைகளால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதனால் கடையை மாற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து கடையை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது தோரமங்கலம் ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை தோரமங்கலம் பொடையன் தெரு அருகில் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கின.
போலீசில் மனு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் யூனியன் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஊராட்சி தலைவர் சுந்தரம், யூனியன் துணைத்தலைவர் சண்முகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அங்கு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.
மனுவை, ஊராட்சி தலைவர் சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் கொடுத்தார். மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.