ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாக்களித்தார்: ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது-சூளகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாக்களித்தார்: ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது-சூளகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது என்று சூளகிரியில் நடந்த விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க. ஆண்டு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி பொன் விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா சூளகிரி பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க. கோட்டை என்பார்கள். ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் இந்த மாவட்டத்தில் நாமும் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் இதே போல நாம் வெற்றி பெற்று இருந்தால் நாம் ஆளும் கட்சியாக இருந்து இருப்போம். நாம் சற்று திறமையாக பணியாற்றாமல் விட்டு விட்டோம்.

சில சந்தர்ப்பங்களில் நம்மை நாமே ஏமாற்றி கொண்டோம். சற்று கடுமையாக உழைக்க தவறிவிட்டோம். அதனால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இன்று 51-ம் ஆண்டு தொடக்க விழா நடந்து வருகிறது. இந்த கட்சி 1972-ல் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இதில் 31 ஆண்டுகள் நாம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்துள்ளோம்.

வேலை வாய்ப்பு

அ.தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேளாண்மை, தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். நமது ஆட்சி காலத்தில் இங்கு ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தோம். ஜெயலலிதாவின் ஆட்சியில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்தோம். அதன் பிறகு 2019-ல் நான் முதல்-அமைச்சராக இருந்த போது 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தோம்.

இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை கொண்டு வந்தோம். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ நாம் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று பேசுகிறார். நமக்கு தி.மு.க.வினர் எண்ணற்ற தொந்தரவுகளை கொடுக்கிறார்கள். இன்று நான் உடனே இந்த பதவிக்கு வரவில்லை. ஆரம்பத்தில் கட்சி உறுப்பினர், பிறகு கிளை செயலாளர் ஆகி, பின்னர் படிப்படியாக பல பதவிகளை அடைந்து இன்று பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். 10 முறை நான் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இருக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளுக்கு எனக்கு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்புகளை தந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடையாது

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டம் கூட்டிய போது, தி.மு.க.வினர் எப்படி எல்லாம் நடந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என ஓட்டு போட்டார். இப்போது பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இனி மீண்டும் கட்சியில் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது.

மு.க.ஸ்டாலினால் அவரது கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் முன்பே சென்னை குளமாகி விட்டது. எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

4 வருடம் 2 மாத எங்களின் ஆட்சியில் செய்த பணிகளை மக்கள் அறிவார்கள். அ.தி.மு.க.வினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதை தி.மு.க. அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர் கொள்வோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம் என்ற பாபு, பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story