திருப்பூரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாநகரில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரம்
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மாநகரில் நேற்று எம்.ஜி.ஆர். சிலை, மாநகராட்சி அலுவலகம் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் முக்கிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
வாசகங்கள்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உருவப் படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சியின் ஒற்றை தலைமையே, வழிநடத்த வாருங்கள்., என்றும் உங்களுடன் அம்மாவின் தொண்டர்கள், திருப்பூர் மாவட்டம்' என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக காணப்படுகிறார்கள். இந்த பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் மாநகரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு
இதுபோல் 'தேவரினமே விழித்தெழு' என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் 'அன்று டி.டி.வி.தினகரன், இன்று சசிகலா, நாளை ஓ.பி.எஸ்.' என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் திருப்பூர் மாநகரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.